பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 3 பேரை மத்திய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. செயற்பட்டிருப்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 3 பேரும் கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் புரோக்கர்களாக செயற்பட்டவர்கள். இவர்களிடம் இருந்து சிறிய அளவிலான கள்ள நோட்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
எனவே கள்ள நோட்டுகளை கண்டறிந்து தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கள்ள நோட்டுகளை கண்டறியும் முறையை கற்றுத் தரவும் இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்காக தொலைக்காட்சிகள், இணையதளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் கள்ளநோட்டுகளை கண்டறியும், பயிற்சி பிரிவுகளை பல இடங்களுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளது.
கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கும் பிரிவு, தற்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் மட்டுமே செயற்படுகிறது. இங்கு வங்கி ஊழியர்களுக்கும், அமலாக்க பிரிவினருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும், கள்ள நோட்டு கண்டறிதல் பற்றி இங்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.
இதனால் டாஸ்மாக்கில் மாற்றப்படும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில்(2011) ஐந்து மாதங்களில் மட்டும் 4,35, 607 போலி கரன்சி நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதே ஆண்டில் ஏப்ரல் முதல் செப்ரெம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2,64,282 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கள்ள நோட்டு புழக்கம் ஐந்து மாதங்களில் இரு மடங்குகளாக அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.
போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், சுலபமாக கண்டறியவும், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
தற்போது நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 64,577 மில்லியன் ஆகும். இதன் மதிப்பு ரூ. 9,35,856 கோடியாகும்.
இது 2011 மார்ச் மாதம் வரையிலான கணக்கு ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியன் கரன்சி நோட்டுகளுக்கு 6.74 என்ற அளவில் புழக்கத்தில் இருந்து கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
கடந்த ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 90 சதவிகிதம் நோட்டுகள் வங்கி கிளைகளில் செலுத்தப்பட்டு கண்டறியப்பட்டவை ஆகும். ரூ.1000, ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த உடன் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டு கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும் ரூ.1000 மற்றும் ரூ.500 முக மதிப்பை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ரூ.100 மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அதற்கான இயந்திரங்கள் மூலம் சோதித்து ஒரிஜினல் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பேப்பர் பயன்பாட்டை குறைக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிடவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.