தாய் தந்தை பேணல்

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றனர். இப்னு உமர்(ரலி) : திர்மிதீ
“அல்லாஹ்வின் கூலியை விரும்பி ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் உங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்துள்ளேன்” என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உம் பெற்றோரில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! இருவருமே உயிருடன் இருக்கிறார்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்விடம் கூலியைத் தானே எதிர்பார்க்கிறீர்?” என்ற கேட்டதற்கு அவர் “ஆம்” என்றார். அதற்கவர்கள், “நீர் உமது பெற்றோர்களிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் நல்ல தோழமையாக நடந்து கொள்ளும்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) : முஸ்லிம்
“ஒரு மனிதர் செய்யும் நன்மைகளில் மிகச் சிறந்த நன்மை, தம் தந்தை மரணித்த பிறகு தந்தைக்கு விருப்பமானவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்
“தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
“ஒருவன் தனது தந்தையை அடிமையாகக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்தால் தவிர (வேறு எதன் மூலமும்) தந்தையின் கடமை மகன் தீர்க்க முடியாது” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹீரைரா(ரலி) : முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் போரில் பங்கெடுக்க விரும்புகிறேன். (அது பற்றி) உங்கள் ஆலோசனையைக் கேட்க வந்துள்ளேன்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் ஆம்” என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “அவரைப் பற்றிக் கொள், ஏனெனில் சுவர்க்கம் அவரது காலடியில் உள்ளது” என்று கூறினார்கள்.
முஆவியா பின் ஜாஹிமா(ரலி) : நஸயீ, அஹ்மத், ஹாகிம்.
“நபி(ஸல்) காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடி வந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்” அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர்.
அஸ்மா பின் அபீபக்கர்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
“அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்! அவன் நாசமாகட்டும்!” என்று நபி(ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” எனக் கேட்டேன். “முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்” என விடையளித்தார்கள்.
அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம், திர்மிதீ
“அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள் “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தாய்” என்றார்கள். “அடுத்ததாக யார்?” எனக் கேட்டேன். “உன் தந்தை” என்றார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வம் இருக்கிறது. எனக்குப் பிள்ளைகளும் உள்ளனர். (ஆனால்) என் தந்தையோ என் செல்வத்தின் பால் தேவையுடையவராக இருக்கிறார்: (நான் என்ன செய்ய?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீயும் உனது செல்வமும் உன் தந்தைக்கு உரியவர்கள். உங்கள் பிள்ளைகள் தாம் நீங்கள் சம்பாதித்தவற்றிலேயே சிறந்ததாகும். எனவே உங்கள் பிள்ளைகளின் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) : அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் (தமது வளர்ப்புத் தாயான) உம்மு ஐமன்(ரலி) அவர்களை பார்க்க சென்றனர். நானும் அவர்களுடன் சென்றேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் உள்ள பாத்திரத்தைக் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மறுத்தனர். அவர்கள் நோன்பு வைத்திருந்ததால் மறுத்தார்களா? அல்லது அவர்களுக்குப் பிடிக்கவில்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது உம்மு ஐமன்(ரலி) கடுமையாகச் சப்தம் போட்டுக் கோபத்துடன் நபியவர்களைக் கண்டித்தார்கள். (நபியவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்) அனஸ் (ரலி) : முஸ்லிம்