சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவாக இருந்தாலும், இன்றுள்ள நிலையில் அது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.


ஆனால், வருமான வரி பிடித்தம் எனச் சொல்லி எல்லாரையும் நிதியாண்டு இறுதியில் வறுத்தெடுக்க காரணமாக இருக்கும் அதே வருமான வரித்துறைதான் சொந்த வீட்டுக்கான விஷயத்திலும் முன்முயற்சியை எடுத்துள்ளது.
இதற்கான வரைவு திட்டம் 2011-12ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, AFFORDABLE HOUSING என குறிப்பிடப்படும் கட்டுபடியாகக் கூடிய விலையிலான குடியிருப்பு கட்டும் தனி நபர் மற்றும் நிறுவனங்கள், இதற்கான மூலதனச் செலவுகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த சலுகை திட்டத்தை 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த இந்திய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது. எனவே, 2012-13ம் நிதியாண்டில் இந்த சலுகை பெற கதவுகள் திறக்கின்றன. எனினும், இதற்கு சில தகுதி வரையறைகளை இத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த குடியிருப்பு திட்டம் குறைந்தது 1 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தொடங்கப்பட வேண்டும். அதோடு, இந்த திட்டம் மூலம் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளில் 30 சதவீதம் நடுத்தர வருவாய் தரப்பு… 60 சதவீதம் குறைந்த வருவாய் கொண்ட தரப்பு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த அடித்தட்டு மக்களின் தேவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி 10 சதவீத்தை மட்டும் அந்த கட்டுனரோ, அல்லது நிறுவனமோ அவரது விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம். இதனால், வருமான வரிச் சலுகை பெற வேண்டியாவது சில நிறுவனங்கள் இந்த மாதிரி திட்டங்களைத் தொடங்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இச்சலுகை பெற தகுதியான முதலீடு என்பது – நிலத்தில்… அந்நிறுவன நற்பெயருக்கு… பிற நிதி சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்டதை தவிர்த்த, மற்ற தொகையை மட்டுமே கருத்தில் கொள்ளும் என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.