தேவையா புத்தாண்டு கொண்டாட்டங்கள்..?


2011 நவம்பர் 26 - அன்றே இங்கே சவூதியில் புத்தாண்டு..!?! புரியவில்லையா..?
ஹிஜ்ரி 1432 முடிந்து அன்றுதான் 1433 ஆரம்பித்தது. அன்றுதான் அவ்வருடத்தின் முதல் நாள். அன்று சவூதியில், யாரும் யாரிடமும் வாழ்த்து கூறியோ, இது பற்றியோ, இந்த நாளை நினைவு படுத்தியோ ஏதும் தனிச்சிறப்பாக கூறிக் கொள்ளவும் வாழ்த்திக் கொள்ளவும் இல்லை; எக்ஸ்ட்ராவாக மகிழவும் இல்லை. அடுத்தநாள் அலுவலகத்தில் புதிய காலண்டர்  (அதில் ஹிஜ்ரி/கிரிகோரியன் இரண்டும் இருக்கும்) மாட்டினார்கள். அவ்ளோதான்..! நான் இங்கு வந்த ஏழு வருஷமாக இப்படித்தான் பார்க்கிறேன். ஹிஜ்ரி வருடப்பிறப்பெல்லாம் இங்கே ஒரு விஷயமே இல்லை..!


அதேபோலத்தான், நேற்று இரவும் எந்தவித வித்தியாசமும் இல்லை..! டிசம்பர் 31 போய் ஜனவரி 1 வந்தது..! இன்று இங்கே காலண்டர் கூட மாறவில்லை..! இன்று மார்னிங் ஷிஃப்ட் லாக் எழுதும்போது அரபி ஒருவர் தேதியை 1-1-2011 என்று பழக்கதோஷத்தில் எழுதியிருந்தார். நான் அதை திருத்தி 2012 என்றாக்கினேன். அவ்ளோதான். மற்றபடி சவூதியின் எந்தவொரு டிவியிலோ, வெளியே வீதியிலோ, அலுவலகத்திலோ எவ்வித குறிப்பிடத்தக்க வித்தியாசமும் நேற்றிரவு இல்லை. "விஷ் யூ ஹாப்பி........" என்றெல்லாம் எதுவும் இல்லை. வெடி, வண்ண விளக்குகள், வாழ்த்துகள் என எதுவும் சவூதியில் நான் இருக்கும் இடத்தில் பார்த்தது இல்லை. நான் இங்கு வந்த ஏழு வருஷமாக இப்படித்தான் பார்க்கிறேன். கிரிகோரியன் வருடப்பிறப்பெல்லாம் இங்கே ஒரு விஷயமே இல்லை..!


ஆனால், துபாய் டிவியில்... நேற்று புர்ஜ் கலீஃபாவில் வானவேடிக்கை - ஆடம்பர வண்ண விளக்குகள்... அமளி துமளி எல்லாம் நேரடி ஒளிபரப்பு..! சுமார் பத்து நிமிஷம் தொடர்ச்சியாக வண்ணவண்ண வெடிகள்..! திர்ஹாமையும் காற்றையும்  அப்படித்தான் கரியாக்கினார்கள், தம் பணத்திமிரால் தம் மனதை நாசமாக்கிக்கொண்டு..! இவ்வுலகில் வேறொரு இடத்தில் பலர் உண்ண ஒருவேளை உணவுக்கும்  உடுக்க ஒரே ஓர் ஆடைக்கும், படுக்க ஒரு கூரைக்கும் கையேந்தும் நிலையில்... இது வீண் வெட்டிச்செலவு இல்லையா..? இங்குமட்டுமா..? நம் ஊரிலும்தானே..? உலகம் முழுதும் பெரும்பாலான நாடுகளில் இப்படித்தானே..? பொருளாதாரமும் சுற்றுப்புறமும் உடல்நலனும் உலகெங்கும் மாசாகும் இந்த மடநாளில்... என் மகிழ்ச்சி எங்கேயோ காணாமல் போனது சகோ..!


எங்கிருந்தோ எப்போதோ எப்படியோ வந்து... சம்பந்தமே இல்லாமல் நமக்கும் இந்த பழக்கம் ஒட்டிக்கொண்டு விட்டது..! ஏன் வாழ்த்து சொல்கிறோம் என்றோ, எதனால் சொல்கிறோம் என்றோ, இதனால் வருடம் முழுக்க அவர் எவ்வித துக்கமும் இன்றி ஹேப்பியாக இருப்பாரா என்றோ நாம் சிந்திக்கவில்லை. இதேபோல தை/சித்திரை-முஹர்ரம்-உகாதி எல்லாம் அமர்க்களப்படுகிறதா என்றோ, இதைமட்டும் எப்போது, யார், எதனால் ஆரம்பித்தது... இந்த புத்தாடை, பட்டாசு, மத்தாப்பு கொண்டாட்டங்களால் யாராருக்கெல்லாம் எவ்வளவு இலாபம், இதன் பின்னணி என்ன.... என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லையே..!  ஏன்..? தினமும் அன்றி, "புதிய காலண்டர் மாற்றும் அன்று" ஒருநாள் மட்டும் நமக்குள் மகிழ்வாக இருக்க பரஸ்பரம் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்..! நல்ல விஷயம்தான். ஆனால், அது வார்த்தையோடு நின்று விடாமல் செயலிலும் இருக்க வேண்டும். உலகம் முழுக்க மகிழ்வோடு இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டுமா... வேண்டாமா..?

மனதில் அமைதியும், வாழ்வில் அனைத்து வகை செல்வமும், அதில் என்றும் குறையாத அபிவிருத்தியையும் இறைவன் புறத்திலிருந்து தம்மீது நிலவ விரும்பாதார் எவர்தான் இருக்க முடியும் சகோ..? 

ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் இன்று ஒருநாள் மட்டுமின்றி என்றென்றும் நம் மீது நிலவியிருக்கட்டுமாக..!

திருவிழா, இலாபம், பிறப்பு, வெற்றி என்று மகிழ்வோடு இருப்போரிடம் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் இதை வாழ்த்தாக சொல்லலாம்.

அது மட்டுமில்லை சகோ... அதேநேரம்,

போர், புயல், பூகம்பம், வெள்ளம், வறட்சி, இறப்பு, இழப்பு, தோல்வி என்று துக்கத்தால் பாதிக்கப்பட்டோரிடமும் கூட...

இதை ஒரு பிரார்த்தனையாகவும் சொல்லலாம். இவர்களிடம் சென்று... "விஷ் யூஹேப்பி நியூ இயர்" என்று சொல்ல முடியுமா..?