திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!


 திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!

[ தீமை செய்வது மட்டுமல்ல தீமைக்கு சாட்சியாக இருப்பதும் குற்றமே என்பதை நாம் எப்படி மறந்தோம்?
அதுவும் ஒட்டுமொத்த உலக சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்ட வேண்டிய நாம் எவ்வாறு நம்முடைய இடத்தையே இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளோம்? இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதுமுண்டா?
சமுதாயங்களிலேயே உயர்வான சமுதாயம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்?
எழுத்தில் உள்ளதை செயலில் கொண்டுவர வக்கற்ற நமக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது?

இனியாவது திருந்தி வாழ்ந்து நம் சமுதாய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது கலிமா சொன்ன ஒவ்வொருவரின் கடமையல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே, சிந்தியுங்கள்!]
‘எவருக்கு மூன்று பெண்; மக்கள் அல்லது மூன்று சகோதரிகள், அல்லது இரண்டு பெண் மக்கள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹ்வை பயந்து நடந்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: திர்மிதீ)

‘எவர் தம் பெண் மக்களின் ஏதேனும் ஒரு காரியத்திற்குப் பொறுப்பேற்று மேலும் நன்முறையில் அவர்களைப் பராமரித்தால் அவர்கள் (பெண் மக்கள்) அவரை (பராமரித்தவரை) நரக நெருப்பை விட்டும் தடுக்கும் திரையாகி விடுவார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)
எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற எண்ணக் கனவுகளை இதயத்தில் ஏற்றி வைத்துப் பார்த்துத் தான் இந்தப் பொன்மொழிகளைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறது.
இன்றைய நிகழ்காலம் சமுதாயத்தை எப்படிக் காய் நகர்த்தி, இருப்பவரைக் கூட கடைக்கோடிக்கு இழுத்துச் செல்கிறது என்பது நாமறிந்த விஷயம் தான். வசதி இருப்பவன் பெண்பிள்ளையைப் பெற்றால் அவனும் ஓட்டாண்டியாக்கி விடுகிறது இன்றைய சமூகச் சூழல். பெற்றெடுத்த பெண் மக்காள் மட்டுமல்ல உடன் பிறந்த சகோதரிகளால் கூட சில சகோதரர்கள் பிச்சாதிபதிகளாகி விடுகிறார்கள். நலிந்த வயோதிகத் தந்தையின் பாரத்தை தன் தலையில் சுமந்து கொண்டு உடன் பிறந்த சகோதரிகளின் திருமண வாழ்க்கைக்காக கையேந்தி வரும் அண்ணன்மார்கள் ஆயிரமாயிரம பேர் தெருத்தெருவாக திரிகின்றனர்.

 பட்டதாரி யாசகர் :

ஒரு முஸ்லிம் சகோதரர் வருடந்தோரும் ரமளான் காலத்தில் வசூலுக்கு வந்துவிடுவார். பள்ளிவாசலில் பயான் செய்வார். கிடைப்பதைப் பெற்றுக் கொள்வார். கடைவீதியிலும் கையேந்துவார். தனியாரிடமும் தன்னைப்பற்றி தெரிவித்துப் பெறுவார். வருடம் தவறினாலும் வருகை தவறாது.
அவரது தாடி, தோற்றம், ஜுப்பாவைப்பார்த்து இவர் இமாம் - ஒரு ஆலிம் - மார்க்க மேதை என நினைத்து ஒரு ஊரின் இமாம் இவரை நெருங்கினார். அவரை நெருக்கமாக விசாரிக்கும்போது உண்மையை மறைக்க முடியாமல் தன்னைப்பற்றி எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்.
‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஹஜரத்! நான் ஆலிமோ அறிஞரோ அல்ல! நான் ஒரு பட்டதாரி. ஊரிலே அரசுப்பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனது தந்தை எனது இருபதாவது வயதில் வஃபாத்தாகி விட்டார். அப்போது எனக்கு இரண்டு அக்காவும் ஒரு தங்கைளும் இருந்தனர். எனது படிப்பின் ஆர்வத்தைக் கண்ட எங்கள் ஊரிலுள்ள ஒரு முதலாளி பட்டப்படிப்பு வரை படிக்க வைத்து எங்கள் ஊரிலேயே வேலையும் வாங்கிக் கொடுத்தார். ஒரு அக்காவுக்கு திருமண உதவியும் செய்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவரும் வஃபாத்தாகி விட்டார். அவரின் மகனை நம்பியிருந்தேன். தகப்பனார் போல் பிள்ளை இல்லை.
நான் ஊரில் கண்ணியத்தோடு வார்ந்து கொண்டிருக்கிறேன். எனது அக்காவுக்காகவும் தங்கைக்காகவும் யாரையும் எதிர்பார்க்க முடியவில்லை. எனது வருமானம் குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு எனது சகோதரிகளுக்கு என்னால் திருமணம் செய்துகொடுக்க முடியாது. எனவேதான் சமுதாயத்தை நம்பினேன். சமுதாயத்தில் நின்று கொண்டு அரசுப் பணியாளன் என்றால் உதவ முன்வர மாட்டார்கள். எனவே தான் இந்த உருவத்துக்குள் ஆகி விட்டேன். நான் ஒரு ‘ஆலிம் என்று தான் இரக்கப்பட்டு ஜகாத், ஸதகா கிடைக்கிறது. சமுதாயம் இரக்கப்படுகிறது!’ என்றார் கண்கள் கலங்கிட!
உடன்பிறந்த சகோதரிகளின் காரியத்திற்கும் பொறுப்பேற்று நிற்கும் இதுபோன்ற சகோதரர்களின் தியாத்தை என்னவென்பது. இதுபோன்றோர் வாழும் புனிதர்கள் என்பதில் ஐயமில்லை அல்லவா?


 சொத்தை இழக்கும் தந்தை :

தென் மாவட்டத்திலுள்ள சங்கைமிகு ஒரு கிராமத்தில் திருமணம் நடந்தது. பரம்பரை வைத்தியக் குடும்பம். ஆண் வாரிசு எதுவும் இல்லை. நான்கு பெண் பிள்ளைகள் மட்டுமே வாரிசுச் செல்வங்கள். மூத்த குமருக்கு நிகாஹ் முடிந்துவிட்டது. இரண்டாவது பெண்ணுக்கு நிகாஹ் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இருபதுகளில் இரண்டு குமர்கள் பருவம் அடைந்து காத்திருக்கின்றனர்.
இந்த இரண்டாவது குமருக்கும் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வாலிபனாகி நிற்கும் ஒரு கடைச் சிப்பந்திக்கும் தான் திருமணம். இருமணம் இணைந்து திருமணமேற்கும் நறுமணத் தம்பதிகளின் ஒப்பந்தப் பதிவுப்பேழை படிக்கப்பட்டது. அதில் முக்கியஸ்தர்களின் கையொப்பத்தோடு மணமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீதனப் பட்டியலும் எழுதப்பட்டுப் படிக்கப்பட்டது.
‘பெண்ணின் தாயும் தகப்பனும் குடியிருக்கும் இந்த வீட்டின் மேற்குப்புறப் பாதியை, மூத்த மகளுக்காக முன்பே சீதனமாகக் கொடுத்துவிட்டபடியால் இந்த வீட்டின் மீதமுள்ள கிழக்குப்புறப் பாதியை இந்த மணமகளாகிய இரண்டாம் மகளுக்கு சீதனமாகக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது மகளும் அவளின் கணவரும் விரும்பும் வரை மணமகளைப் பெற்ற தாயும் தகப்பனும் இந்த வீட்டில் வசித்துக் கொள்ளலாம். அவர்களின் சம்மதம் இல்லாத பட்சத்தில் பெற்றோர்கள் வெளியேறிக்கொள்ள வேண்டும்’
பதிவு ஏடு படிக்கப்பட்டிருக்கும்போது, மணமகளின் தகப்பனார் முகம், கவிழ்ந்து இடது கரத்தை தலை நெற்றியில் வைத்துத் தன்னை அறியமால் விழி மலர்ந்து கொண்டிருக்கிறார். திறந்திருக்கும் விழிகளிலிருந்து கண்ணீர் மடியில் வடிந்தன்.
நான்கு பெண்களைப் பெற்ற அந்த தந்தை இரண்டாம் பெண்ணின் திருமணத்திலேயே இருக்கும் வீட்டை முழுமையாகப் பறிகொடுத்து நிற்கும் காட்சியைக் காணும்போது இதயமே நின்றுவிடும் போலத் தெரிந்தது. பெற்றெடுத்த பெண் பிள்ளைகளுக்காக கட்டிய வீட்டைவிட்டு வெளியேறும் நிலை. வீட்டுக்கு வந்த மருமகள் மனது வைத்தால் எந்த உரிமையும் இல்லாத ஜடமாகத் தனது பூர்வீக வீட்டில் நடமாடலாம். அவரின் இசைவு இல்லையென்றால் வாய் பொத்திக் கண் மூடி, கை கட்டி நடையைக் கட்டிவிட வேண்டியதுதான். (-முபல்லிகா ஏ.ஓ.நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்)

மேற்காணும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அவலங்களை அநியாயங்களை களைவது எப்படி?
 திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!

இஸ்லாமியத் திருமணத்தின்போது நடைபெறும் அத்தனை வழிகேடான செயல்களுக்கும் சாட்சியாக இருப்பது யார்? இவை அத்தனைக்கும் பொறுப்பதாரி யார்? யார்? யார்? இதை முற்றிலுமாக களைய முடியாதா? இதற்கு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று மட்டுமே காரணம் சொல்லப்படுகிறது. இது முக்கிய காரணங்களில் ஒன்று தான். ஆனால் இவர்களைப் போல் முக்கிய குற்றவாளியாக கருதத்தகுந்தவர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமானவர்கள் அந்தந்த ஊர் மு(த்)தவல்லியும், நாட்டாண்மையும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் தான்.
ஒவ்வொரு ஊரின் பொறுப்பதாரிகளான இவர்கள் அனைவருமே நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு இணையாக புத்தும்புது உடையணிந்து பவ்வியமாக மணமேடையில் அமர்ந்து கொண்டு சாட்சிக் கையெழுத்து போடும் இவர்களும் முக்கிய குற்றவாளிகளே! ஏனெனில் இவர்களிடம் தான் அல்லாஹ் அந்தந்த ஊரின் பொறுப்பை வழங்கியிருக்கின்றான் எனும்போது இவர்கள்தான் அதற்கு பொறுப்புதாரி.
இவர்களால் அதனை தடுத்து நிறத்த முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். கேட்டால் அவர் கோபித்துக் கொள்வார், இவர் கோபித்துக் கொள்வார்! அல்லாஹ் கோபித்துக்கொள்வானே, அதை எண்ணி அஞ்ச வேண்டாமா?
வரதட்சணை வாங்கும் திருமணத்தில், இஸ்லாத்திற்கு புறம்பான செயல்பாடுகளுடன் நடைபெறும் திருமணத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்ற ஒவ்வொரு ஊரின் மு(த்)தவல்லியும் நாட்டாண்மையும் சொல்லிப்பார்க்கட்டுமே! சொல்லிப்பார்கட்டுமே என்னஸ சொல்ல வேண்டும்! இல்லையெனில் மறுமையில் அவர்கள்கதி அதோ கதிதான்.
ஊரை நிர்வாகம் செய்யக்கூடிய – அதிகாரத்திலுள்ள இவர்கள் எவ்வாறு இதுபோன்ற மார்க்கத்திற்குப் புறம்பான செயலை நடத்துவதோடு அதனை பதிவும் செய்கிறார்கள்?! நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் இந்த திருமணப்பதிவுப் புத்தகம் வாசிக்கப்படும்போது இவர்கள் அனைவருமே குற்றவாளியாக்கப்பட்டு தண்டணையிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்கள் சிறிதுகூட எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லையே!
இந்த ஒரு திருமணம் மட்டுமல்ல, இதுபோன்று நடத்தப்படும் ஒவ்வொரு திருமணத்தைப் பற்றியும் அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்கள் என்பதை அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய ஆலிம்களும் மவுனம் சாதிப்பார்களானால் அவர்களும் இறை தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். மறுமை மிகவும் நெறுக்கத்தில்தான் இருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம்.
இஸ்லாத்தில் இல்லாத நூதனங்களை புகுத்திய குற்றம், அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் இட்ட கட்டளைகளுக்கும் மாற்றமாக நடக்கும் நடக்கும் இச்சம்பவங்களுக்கு துணைபோன குற்றம். அதிகாரமிருந்தும் அதை தடுக்காத குற்றம். இன்னும் அநீதி இழைக்கப்பட்ட அந்த மணப்பெண்ணின் துஆ அல்லாஹ்விடம் எவ்வித தடங்களுமின்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் மறுமையில் இவர்கள் நிலை என்ன?
பதவி என்பது அலங்காரமல்ல. மிகப்பெரும் பொறுப்பு. சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே முடியும். முஸ்லிம் ஜமாஅத்தார்களைப் பொறுத்தவரை அதிகார வர்க்கம் என்பது மு(த்)தவல்லியும் நாட்டாண்மைகளுமே! ஆகவே சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச்செல்ல வேண்டிய முழு பொறுப்பும் அவர்களைச் சார்ந்ததே! பொறுப்புகளை அவர்கள் சரிவர நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பார்களேயானால் என்ன விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதை அல்லாஹ்வின் திருவேதத்தைப்பார்த்து அவர்கள் தெளிவு பெறட்டும்.

 இத்தகைய சமூக அவலங்களை களையும் வழிகள் :

திருமணத்திற்கு அனுமதி வழங்காதபட்சத்தில் குழப்பம் வரும் என்றிருக்குமானால் திருமணத்திற்கு அனுமதி வழங்கினாலும் அந்தந்த ஊர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் எவரும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது. அதன் வாயிலாக இது வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணம் என்பதை ஊர் மக்களுக்கு மறைமுகமாக அறிவிப்பு செய்தது போலாகிவிடுகிறது. சமுதாயத்தில் கவுரத்தை இழக்க பெரும்பான்மையோர் விரும்ப மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இது நல்ல ரிஸல்ட்டைக் கொடுக்கும்.
உண்ணும் உணவு ஹலாலாக இல்லாதபட்சத்தில் அவர்களின் ‘துஆ’ அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்பதை எல்லோரும் - அதுவும் குறிப்பாக தொழுகையாளிகள் எப்படி மறந்தார்கள்?
வரதட்சணைப்பெற்று நடத்தப்படும் திருமணத்தில் பரிமாறப்படும் உணவை திருமணம் நடத்தி வைக்கும் ‘இமாம்; சாஹிப்’ எக்காரணத்தை முன்னிட்டும் உண்ணக்கூடாது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் இறைவனிடம் ‘துஆ’ செய்ய வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய அவர்கள், இவர்கள் வழங்கக்கூடிய ‘தூய்மையற்ற’ உணவை உண்பதன் காரணமாக அவர்களுடைய ‘துஆ’ அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளடாமல் திருப்பியனுப்பப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால் அது இந்த சமூகத்திற்கு அவர்கள் இழைக்கும் மாபெரும் துரோகமாகும்.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் போன்ற மாபெரும் அறிஞர்களின் துணிவு இக்கால உலமாக்களிடம் இல்லாமல் போனதே இன்றைய சமூக அவலங்கள் பலவற்றிற்குக் காரணமாக இருக்கிறது என்பதை எவர்தான் மறுக்க முடியும்?

தீமை செய்வது மட்டுமல்ல தீமைக்கு சாட்சியாக இருப்பதும் குற்றமே என்பதை நாம் எப்படி மறந்தோம்?

அதுவும் ஒட்டுமொத்த உலக சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்ட வேண்டிய நாம் எவ்வாறு நம்முடைய இடத்தையே இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளோம்? இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதுமுண்டா? சமுதாயங்களிலேயே உயர்வான சமுதாயம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்? எழுத்தில் உள்ளதை செயலில் கொண்டுவர வக்கற்ற நமக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இனியாவது திருந்தி வாழ்ந்து நம் சமுதாய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது கலிமா சொன்ன ஒவ்வொருவரின் கடமையல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே, சிந்தியுங்கள்! சிந்திக்காதவரை தெளிவு கிடைக்காது. மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது நமக்கு எவரும் துணை புரிய மாட்டார்கள். நாம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.
வெறுமனே வாழ்ந்துவிட்டு மறைவதற்கல்ல இந்த பிறவி! திருமறையில் அல்லாஹ் தெளிவாகக்கூறிவிட்டான், மரணத்தையும் வாழ்வையும் அல்லாஹ் படைத்திருப்பது உங்களில் எவர் நல்லவர், எவர் தீயவர் என்பதை அறிவதற்காகவே! அதுமட்டுமல்ல, அல்லாஹ்வின் பார்வையில் கொசுவின் இறக்கைக்கு கூட சமமில்லாத இந்த உலக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத அற்புதமான சுகங்களை அள்ளித் தரக்கூடிய மறுமையின் சுவன வாழ்வை இழப்பானேன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் இறையச்சமுடையவர்களையும், இறைசட்டத்தை பின்பற்றக்கூடிய நிர்வாகத்தையும் ஒவ்வொரு முஸ்லிம் மஹல்லாவுக்கும் வழங்கி இந்த தீனுல் இஸ்லாத்தை செழித்தோங்கச் செய்வானாக. ஆமீன்.