ஆரோக்கியமும் உடல் நலமும்...!


உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைவது அவசியம். இயற்கையோடு இணைந்து வாழ்வது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியம். செக்ஸ் வாழ்க்கையும்
இயற்கையோடு இணைந்த ஒன்றுதான்.

செக்ஸ் என்பது ஆரோக்கியமான விஷயம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உண்பதைப் போலவே, ஆரோக்கியமான செக்ஸ் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்துப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் தங்களுடைய செக்ஸ் தேவைகளை மனம்விட்டுப் பேசிக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. மனம் விட்டுப் பேசி தேவைகளை பூர்த்தி செய்கிறபோது தாம்பத்யம் ஆரோக்கியம் பெறுகிறது.
செக்ஸ் பற்றி பேசுவதோ எழுதுவதோ தீண்டத்தகாத விஷயம் என்ற பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது ஆரோக்கியமான விஷயம், ஆரோக்கியத்திற்குத் தேவையான விஷயம் என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள் மிக சிலரே! மனித இனவிருத்திக்கும், உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கை அமைதிக்கும் தேவையான ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்துகொள்ள தயங்குவதே தவறான அணுகுமுறையாகும்.

செக்ஸ் என்பது உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட ஒன்றாக இருக்கிறது. தவிர, உடல் இயக்கத்திற்கு அடிப்படையாக உள்ள நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, உடலிலுள்ள மற்றொரு முக்கியமான ஹார்மோன் இயக்கமும் செக்ஸ் வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதாக இருக்கிறது. எனவே, ஆரோக்கியவாழ்க்கை வாழ விரும்புகின்ற ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, செக்ஸ் உறவுகளில் ஆரோக்கியமான போக்கினை கடைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது ஆகும்.

ஆரோக்கியத்திற்கும், செக்ஸ் உணர்ச்சி தேவை பூர்த்திக்கும் என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம். பருவமடைந்த பிறகுதான் செக்ஸ் உணர்ச்சியினை வெளிப்படையாக நாம் உணர்கிறோம். ஆனால் அந்த உணர்ச்சி குழந்தைப்பிராயத்திலேயே மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.குழந்தைகளின் பல்வேறு நடவடிக்கைகளில் இதை பார்க்க முடியும்.
குறிப்பிட்ட ஒரு பருவத்தில் இந்த உணர்ச்சியை வெளிப்படையாக நாம் உணர்வதற்கக் காரணம் என்ன? இயற்கை, இனவிருத்தி வேலையை நாம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. அதைப் பூர்த்தி செய்து வாழ்கின்றபோதுதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை நாம் வாழ்வதாக அர்த்தம். பசி எடுத்தால் சாப்பிடுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துகிறோம். அதைப்போலவே செக்ஸ் என்கிற உடற்பசி ஏற்பட்டால் அந்த தேவை பூர்த்தியாவது அவசியம். எல்லா உணர்ச்சி தேவைகளையும் போலவே செக்ஸ் உணர்ச்சி தேவைகளும் இயற்கையானதுதான்.
பசிக்கு உணவுன்னல், தாகத்திற்கு தண்ணீர் குடித்தல் போன்றவை தனிநபராக செய்துவிடக்கூடிய காரியங்களாகும். ஆனால் செக்ஸ் தேவை பூர்த்தி என்பது ஆண் பெண் ஆகிய இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவேதான் இயற்கை ரொம்பவும் சாதுர்யமாக ஒரு குறிப்பிட்ட பருவத்தில் செக்ஸ் உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. இது இறைவனின் அற்புதமான ஏற்பாடு என்றே சொல்லலாம்.

ஆண் - பெண் கூட்டுறவுதான் செக்ஸ உணர்ச்சி தேவையின இருவரிடமும் பூர்த்தி செய்கிறது. அதனால் தான் குறிப்பிட்ட பருவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து திருமணம் முடித்து நல்லறமான இல்லறம் எனும் தாம்பத்ய வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மனித வாழ்வில் இது ஒரு சுவாரசியமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

ஆணின் தேவையினைப் பெண்ணும், பெண்ணின் தேவையின ஆணும் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இது பூர்த்தியாகும்போது தான் இருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடிகிறது. எனவே, ஆணின் தேவையினை பெண்ணும், பெண்ணின் தேவையினை ஆணும் உணர்ந்து தாம்பத்ய சுகத்தில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் ஒருவரின் ஆரோக்கியத்தை இன்னொருவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமிது.
ஆணின் ஆரோக்கியத்தை பெண்ணும், பெண்ணும் பெண்ணின் ஆரோக்கியத்தை ஆணும் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே தாம்பத்ய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவரின் செக்ஸ் தேவைகளை இன்னொருவர் புரிந்துகொண்டு வாழ்வது அவசியமாகிறது.
செக்ஸ் தேவைகள் பூர்த்தியாகாதபோது மன ஆரோக்கியம் முதலில் கெட்டுப்போகிறது. உணர்ச்சிப் பாதிப்புகள்தான் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு முக்கிய காரணம். செக்ஸ் தேவைகள் பூர்த்தியாகாதபோது நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. ஹார்மோன்களின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுகிறது. உணர்ச்சி தேவைகள் நிறைவேறாமல் போவதால், நிறைவேறாத ஆசைகள் ஆழ்மன பதிவுகளாகி தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறது. மன அளவிலும், உடல் அளவிலும் பல வகையான பாதிப்புகள் தோன்றுகின்றன.
சிலர் என்று சொல்வதைவிட பலர் தங்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு செக்ஸ் தேவை பூர்த்தியாகாததுதான் காரணம் என்பதை உணராதவர்களாகவே இருக்கிறார்கள். தவிர இதுபோன்ற விஷயங்களை ஆரோக்கியத்தின் ஒரு அம்சமாக கருதுவதில்லை. அதை ஒரு கடமையாக மட்டுமே ஏற்று செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதன் பின்னே உள்ள உணர்ச்சி தேவைகளை எண்ணிப் பார்ப்பதில்லை. அற்புதமான தாம்பத்ய வாழ்க்கையில் கூட ஓர் இயந்திரமான செயல்பாடு போல ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
தாம்பத்ய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வேறு பல காரணங்களால் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும், மன இறுக்கத்திற்கும் ஆளானாலும், முழுமையான, மனமொத்த செக்ஸ் உணர்வு கொள்கிற போது மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். செக்ஸ் உணர்வு சரியான தன்மையில் நிகழாதபோது மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, நரம்புத் தளர்ச்சி, குடல்புண் போன்ற பல்வேறு நோய்களுக்;கு காரணமாகிவிடுகிறது.

முழுமையான செக்ஸ் உணர்வின்போது உடலிலுள்ள அளைத்து உணர்ச்சிகளும் ஆரோக்கியமான சமநிலைக்கு வந்துவிடுகின்றன. இதனால் இறுக்கம் நீங்கி உடல் ஆரோக்கிய நிலையினைப் பெறுகிறது. இதனால்தான் இருதய நோயாளிகளும் கூட மிதமான செக்ஸ உணர்வு கொள்வதன் மூலம் அந்த நோயின் கடுமையின குறைத்துக்கொள்ள முடியும் என மருத்துவ நிபுணர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

இதுமட்டுமின்றி பலவிதமான மனநோய்களுக்கும் செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படாமல் போவதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனதில் ஏற்படும் குறைபாடுகள் உணர்ச்சி மோதல்களாக வெளிப்படலாம். உடல் ஆரோக்கிக் குறைவாக வெளிப்படலாம். எவ்வகையான வெளிப்பாடாயினும், வாழ்க்கையை அது பாதிக்கவே செய்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செக்ஸ் நிறைவு தேவை என்பதை குறைத்து மதிப்பீடுவதற்கில்லை.
‘செக்ஸ் என்பது செக்ஸ் உறுப்புக்களில் இல்லை, மனதில்தான் இருக்கிறது’ என்று செக்ஸ் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆரோக்கியமான செக்ஸ் உணர்ச்சிக்கு மனமே காரணமாகிறது. உங்கள் மனைவியை நீங்கள் நேசிக்காமல் அவருடன் முழுமையான செக்ஸ் உறவு கொள்வது சாத்தியமில்லை. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புகிற அனைவரும் செக்ஸ் உறவில் சிறப்பான கவனம் செலுத்துவது அவசியம். இதை பலர் தவற விடுவதால்தான் குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளுக்கும், மனச்சோர்வுகளுக்கும் சில சமயங்களில் காரணம் தெரியாமல் தடுமாறுகிறோம்.
நமது ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துகின்ற சக்தி படைத்தது செக்ஸ் உணர்ச்சி. சிந்தனையைக் கூர்மையாக்கி வேகமாக செயல்படுகின்ற சக்தியும் அதற்குண்டு. தாம்பத்ய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு முழுமையான செக்ஸ் உணர்வு இன்றியமையாதது என்பதை புரிந்து கொள்வோம். தாம்பத்யத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.
-பி.எஸ். ஆச்சார்யா