பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹமதின் செல்பேசி எண் இருக்கும். குடிநீர்ப் பிரச்னையில் தொடங்கி சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஒரு அழைப்பில் பிரச்னையை முடித்துக் கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.
|
நன்றி: ஆனந்த விகடன்
oOo
இவை போக, பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம் எனும் ஊரில் அமைந்துள்ள Rural Education & Action Development (READ) எனும் மன நலம் குன்றிய மழலையருக்கான பயிற்சி மையத்தைக் கடந்த 23.6.2011இல் திறந்து வைத்து, இன்றும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறார் தாரேஸ் அஹ்மது.
மூட நம்பிக்கை: தெளிவாக்கிய தாரேஸ் அஹமது!
'ஒவ்வொரு அமாவாசைக்கும் பாம்பு சட்டையை உரிப்பது போலவே, எங்கள் ஊரில் சிறுவன் ராஜதுரையின் உடம்பிலும் தோல் உரிகிறது’ எனும் தகவல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வரவே, பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தை அடுத்த வெங்கலம் கிராமத்தில் ஆஜரானோம்.
ராஜதுரையின் வீட்டைக் கை காட்டிய உள்ளூர்வாசிகள், குடும்பத் தகராறு காரணமாக அவனுடைய அம்மா கோகிலா, சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருப்பதாகவும், அப்பா அசோக்குமார் மறுமணம் செய்துகொண்டு தனியாக வசிப்பதாகவும் கூறினார்கள். கூலிவேலை செய்து பேரனைக் காப்பாற்றி வரும் பாட்டி சூடாமணியிடம் பேசினோம். ''நாங்க குடும்பத்தோட டெல்லியில கூலி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அங்கதான் இவன் பொறந்து வளர்ந்தான். கைக்குழந்தையா இருந்தப்பவே இவனுக்குத் தோல் உரிய ஆரம்பிச்சது. டெல்லியில பனி அதிகமா இருக்கிறதால, தோல் உரியுதுன்னு அசட்டையா இருந்துட்டோம். பிறகு, அங்க வேலையில்லாம ஊரோட வந்துட்டோம். இப்பவும் அமாவாசை வந்தா, இவனோட உடம்புல தோல் உரிய ஆரம்பிக்கும். அன்னையில இருந்து ஆறேழு நாள் பட்டை பட்டையா பாம்பு சட்டையை உரிப்பது போலவே, தோல் உரிஞ்சிக்கிட்டு வரும். ரத்தம் கசியும். அந்த நேரத்துல வெதுவெதுப்பா சுடுதண்ணியில குளுப்பாட்டணும். இல்லைன்னா வலியில துடிச்சிடுவான். இவனுக்கு என்ன நோய்னு டாக்டர்களுக்கும் தெரியலை. அமாவாசையில இருந்து 10 நாள் வரைக்கும் இவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம வீட்டோடே வச்சிருப்பேன். அமாவாசை வந்தாலே பயமா இருக்கு...'' என்றார் ஆதரவற்ற அந்த மூதாட்டி. சிறுவன் ராஜதுரையை, மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவிடம் அழைத்துச் சொன்றோம். அடிப்படையில் மருத்துவர் என்பதால் ராஜதுரையைப் பரிசோதித்த பிறகு நம்மிடம் பேசிய கலெக்டர், ''இந்த நோயை 'ஆட்டோஇம்மியூன் டிஸார்டர் எகைன் சிண்ட்ரோம்’ என்பார்கள். கருத்தரிப்பில் ஏற்படுகிற ஜீன்களின் குறைபாடு அல்லது மரபுவழியாக இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பனிக்காலங்களில் அதிகமாக தோல் உரியும். முழுதாகக் குணப்படுத்த இயலாவிட்டாலும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இவனுக்குச் சிறப்பு மருத்துவம் கொடுக்க சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பாடு செய்கிறேன். இவனை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்'' என்று உறுதியளித்தார். அந்த ஏழைகளின் சிரிப்பில் தெரிந்தது, நிஜ ஆனந்தம்.
நன்றி: ஜுனியர் விகடன்
|