Welcome Guys

வருகையாளர்கள்

வடக்குமாங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாஅத்.காம். Powered by Blogger.

புதிய ஆக்கங்கள்.

காதலா?உறவா?...
 காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.

காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.

ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?


உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!
உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.

http://www.marhum-muslim.com/
19:41 | 0 comments | Read More

நல்ல அனுபவமுண்ணே....!


E-mail
(உண்மைக் சம்பவம்)

அஸ்ஸலாமு அலைக்கும்,
மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார். (அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.
சுடிதார் செக்ஷனில் நின்னுக்கே அந்த செக்ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.
2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும்.
இரண்டே மாதத்தில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பெண்கள் எந்த வகையான மாடல் சுடிதார்கள் விரும்புகிறார்கள், அவர்களிடம் எப்படி பேச வேண்டும் எந்தவகையான சுடிதார்கள் அதிக சேல்ஸ் இப்படி அனைத்தையும் கவணித்து நல்ல சேல்ஸ்மேனாக மாறினேன். எப்படிப்பட்ட் நல்ல சேல்ஸ்மேன் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அதிலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.
கல்லூரியில் படிக்கும் பெண்கள் ஒரு குரூப்பாக சுடிதார் எடுக்க வந்தார்கள். இவர்களிடம் விற்க வேண்டும் என்றால் துணியின் தரம், டிஷைன் மெட்டீரியல் இவைகளை விடிய விடிய சொன்னாலும் வேலைக்காகாது. அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள். அன்றும் அதே கதை தான். இதை பாருங்க இது ரன் படத்தில் மீரா ஜாஸ்மீன் போட்டிருந்த சுடிதார் என்று ஆரம்பித்தேன்.
இந்த கலரில் ரன் படத்தில் ஒரு கட்டத்தில் கூட மீரா ஜாஸ்மீன் சுடிதார் போடவில்லை என்று அந்த குரூப்பில் கொஞ்சம் விவரமான பெண்ணிடமிருந்து குரல் வந்தது . அடுத்த விநாடியே யோசிக்காமல் மாதவன் கூட கையை பிடிச்சுகிட்டு ஓடிப்போகிற சீனை மறுபடிக்கும் நல்ல பாருங்க. லைட் வைலட் கலரில் இந்த கலரில் சுடிதார் போட்டு இருப்பார் என்று மடக்கி விற்று நல்ல சேல்ஸ்மேன் என்று பெயரெடுத்தேன்.

நல்ல விற்பனையாளர் என்று பெயரெடுக்காத பலர் அந்த கடையில் வேலை பார்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் புடவை பிரிவில் இருந்த அண்ணன் காதர் அவருக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும். நேர்மையாக விற்பனை செய்ய நினைப்பவர் புடவையின் தரம், ரகம், முந்தியில் பாருங்க, அழகான டிசைன் இப்படித்தான் பேசுவாரே தவிர நடிகைகளை இழுக்க மாட்டார். அதனால் அவர் முதலாளியின் பார்வையில் திறமையற்ற சேல்ஸ்மேன்.
ஒரு முறை இப்படித்தான் ரொம்ப காஸ்ட்லியான வாடிக்கையான கஸ்டமர் புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் சளைக்காமல் இறக்கி ரகங்களை காட்டிக் கொண்டும் அதன் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் திருப்தியடையாமல் போய் விடக்கூடிய சூழலை உணர்ந்த சூப்பர்வைசர் (முதலாளியின் மச்சான்) வேகமாக என்னிடம் வந்து டேய் கஸ்டமர் போயிருவாங்க போல நீ போ என்றார்.
பழைய சேல்ஸ்மேனை நம்பாமல் நம்மை கூப்பிடுகிறார் என்றால் ம்ம்ம் நீ பெரிய ஆளுடா என்ற அகம்பாவம் தலைக்கு ஏற உள்ளே போய் புதுசா வந்திருக்கிற சேலை ரகங்கள் உள்ளே இருக்கு. இந்தா எடுத்து தருகிறேன். மெளனம் பேசியதே திரைப்படத்தில் த்ரிஷா கட்டின சேலை இருக்கு, பாபாவில் மனீஷா கொய்ராலா கட்டுன டிசைன் சேலை இருக்கு பாருங்க என்றதும் எங்கே எங்கே காட்டுங்கள் பார்ப்போம் என்று அந்த பெண்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. கொஞ்சம் நேரத்தில் வெற்றிகரமாக பல சேலைகளை வாங்கி செல்ல வைத்தேன்.
வாடிக்கையாளர் வெளியே போனதும் நேராக சூப்பர்வைஸர் காதர் பாயிடம் வந்து திட்ட ஆரமித்தார். அவன பாருங்க சின்ன பையன் அவனுக்கு இருக்குற புத்தி ஒங்களுக்கு ஏன் இல்லை. அவனுடைய ''.......'' வாங்கி குடிங்க என்று அசிங்கமாக ஏசியதை எதிர்த்து பேசமால் தலைகுனிந்து திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்பதான் எனக்கு அறிவு வந்தது. ஒரு நேர்மையான பெரிய மனிதரை திட்டு வாங்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மனதை அறுத்தது. தணிப்பட்ட முறையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். விடுடா நான் மனதில் எதுவும் நினைக்கவில்லை என்று சாதாரணமாக சொன்னார். அப்போது தான் அவரைப் பற்றி விசாரிக்க தோன்றியது.
''அண்ணே எத்தனை வருஷமாக இங்கு வேலை பார்க்கிறீர்கள். இதற்கு முன் எங்கிருந்தீர்கள்?''
''அஞ்சு வருஷமாக இங்கு வேலை பார்க்கிறேன். 28 வயசுலே சவூதிக்கு போனேன் 60 வயது வரை அங்குதான் வேலை பார்த்தேன்'' என்றார்.
32 வருடம் சவூதியில் சம்பாதிக்கவில்லையா? பணத்தை சேர்க்கவில்லையா? ஏன்ணே 32 வருடம் உழைத்த பணத்தை வைத்து வீட்டில் பேரன் பேத்தியோடு நிம்மதியாக இருக்குறத விட்டுபுட்டு இவிய்ங்ககிட்ட வந்து திட்டு வாங்கிட்டு கெடக்குறீகளே?'' என்றேன்.
அதற்கவர் ''அடப் போடா 32 வருடம் சம்பாதித்தேன். பசங்களை நல்ல பெரிய படிப்பு படிக்க வைத்தேன். குமர்களை கட்டிக் கொடுத்தேன், வீடு கட்டினேன். அவ்வளவுதான் கையிலே சல்லி காசு இல்லே.கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே. எனக்கு பணமும் அனுப்புவதில்லை. 32 வருடம் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும்போது சர்க்கரை வியாதி,பிளாட் பிரஷர் இப்படி பல வியாதிகளையும் கொண்டு வந்திட்டேன். மருந்துக்கே எனக்கும் என் மனைவிக்கும் மாதம் 2500 ரூபாய் வேண்டும். நான் எங்கே போவேன் அதான் இங்கு இவிய்ங்ககிட்ட திட்டு வாங்கி கொண்டு குப்ப கொட்டிக் கிட்டு இருக்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டே விரக்தியான சிரிப்பை உதிர்த்தார்.
சத்தியமாக என்னால் அந்த சிரிப்பை ரசிக்க முடியவில்லை அதற்கு பிறகு 2004ல் விசா கிடைத்து சவூதிக்கு போகிறேன் என்று அவரிடம் போனில் சொன்னபோது அடுத்த பலிஆடா என்று சிரித்தார். என்னிடமிருந்தும் விரக்தியான ஒரு சிரிப்பு அத்துமீறி வெளிப்பட்டது.
நன்றி: வலையுகம் Dr. ஹைதர் அலி
( கட்டுரையின் முகப்பில் உள்ள புகைப்படத்தில் உள்ளது மயிலாடுதுறை மணிக்கூண்டு )

http://www.marhum-muslim.com/
19:39 | 0 comments | Read More

பிஞ்சு மனம் நஞ்சானதே...!

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய இரண்டு கொலைகள்.

ஒன்று: சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.
அடுத்தது: மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம்.
இரண்டுமே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்று தெரியவருகிறது
முதலாவதாக; சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம். கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.
அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.
பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.
கொலை செய்தது ஏன்? எனக்கேட்டதற்கு, ''ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர்.அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.
வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன். கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன். அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.
நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார். எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.
இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.
ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது. அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.
அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார். நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.
டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.
ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.
மற்றொன்று :
வேலியே பயிரை மேய எத்தனித்த சம்பவம்
மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து உஷாராணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலையுண்ட ஜோதிபாசு என்ற வீரண்ணன் தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உஷாராணி மகளின் மானத்தை காப்பதற்காகவே வீரணனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள உஷாராணியின் 2-வது மகள் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அவரது உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஜோதிபாசு தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதும், அதிலிருந்து மகளை காப்பாற்றவே உஷாராணி தனது கணவரை கொலை செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கொலை செய்தால் அது சட்டப்படி குற்றமாகாது.
எனவே அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் உஷாராணியை விடுதலை செய்தனர்.
கொலை வழக்குகளில் இதுபோல விடுவிக்கப்படுவது மிக அரிய நிகழ்வாகும். போலீசாருக்கு ஜோதிபாசு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதாலும், பல காவல் நிலையங்களின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
ஏற்கெனவே இவர் மனைவி மற்றும் மகள்களை துன்புறுத்துவதாக போலீசில் புகார் இருந்தது. இந்தப் புகார் குறித்து விசாரித்த போலீசாரிடம், இனி மனைவியை அடிக்கவே மாட்டேன் என உறுதி அளித்துவிட்டுப் போனாராம். அடுத்த 15 தினங்களில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். அதன் விளைவாகவே உஷா ராணி அடித்துக் கொன்றுவிட்டார்.
இந்த மாதிரி வழக்குகளில் போலீசாருக்கு உண்மை முழுமையாகத் தெரிந்தால், அவர்களே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை இது. குற்றத்துக்கான முகாந்திரம் உறுதியாகத் தெரிந்ததால் இந்த முடிவை மேற்கொண்டோம்," என்றார்
19:38 | 0 comments | Read More

கோபக்காரக் கணவனை சமாளிப்பது எப்படி?

மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ  .      கணவன் நற்குணம் கொண்டவனாக இருந்து விட்டால் அந்தப் பெண் பெரும் பாக்கியசாலி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ‘ஒருவர் உங்களிடம் பெண் கேட்கின்றார். அவரது மார்க்க ஒழக்கமும், குணமும் உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அவருக்கு உடனடியாக உங்கள் பெண்ணை மணமுடித்துவிடுங்கள்’ என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆண்மகனிடம் - மணமகனிடம் நாம் எதிர்பார்க்க வேண்டிய மிக முக்கியமான பண்புகள் மார்க்க ஒழுக்கமும், நற்குணமும்தான் என்பதை உணரமுடியும்.

கோபமுள்ள கணவன்மார்களைப் பெற்ற இல்லத்தரசிகள் தங்கள் வாழ்வை இனிமையானதாக ஆக்கிக்கொள்ள மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.

ஒன்று தமது குணத்தை அழகாக்கிக் கொள்வது. இரண்டு, மார்க்க அறிவைப் பெருக்கிக் கொண்டு தம் கணவருக்கு அடிக்கடி நல்லுபதேசம் செய்து அதன் மூலம் திருத்த முயற்சித்தல். மூன்று, வல்ல ரஹ்மானிடம் தம் கணவரின் நற்குணத்திற்காக பிரார்த்திப்பது. இம்மூன்றின் மூலம் எவ்வளவு கோபமான கணவனையும் சமாளித்து விடலாம்.
நல்ல மனைவிக்குரிய இலக்கணத்தைச் சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவளது கணவன் அவளைப் பார்த்தால் அவனுக்கு அவள் மகிழ்ச்சியூட்டுவாள். அவன் அவளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் உடனே கீழ்ப்படிவாள். அவன் அவளை விட்டு வெளியே சென்றுவிட்டால் தனது கற்புக்கும் அவனது உடமைகளுக்கும் காவலாக இருப்பாள்’ என்று கூறினார்கள்.

இந்த அற்புதமான மணிமொழியை ஒரு பெண் நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு கொடிய கணவனாக இருந்தாலும் நிச்சயம் திருந்திவிடுவான் என்பது நிதரிசனமான உண்மையாகும். (ஊருக்கும் உலகத்திற்கும் பெரிய ரவுடியாக, எல்லோரும் பயப்படக்கூடிய ஆளாக இருக்கும் சிலர் தனது மனைவியிடம் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போவதை மிகவும் எதார்த்தமாக அன்றாட நடைமுறையில் காணத்தானே செய்கிறோம்!)

ஸலாம் கூறுங்கள்
கணவன் வீட்டுக்குள் வந்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்வது நல்ல மனைவியின் நற்பண்பு மட்டுமல்ல, கெட்டகணவனைத் திருத்துவதற்கும் சிறந்த வழிகாட்டலாகும்.

இல்லத்தரசிகளே! கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருங்கள். அவன் வந்தவுடன் அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் வரவேற்புக் கொடுங்கள். வந்ததும் வராததுமாக வீட்டின் குறைகளையும் பிள்ளைகளின் குற்றங்களையும் உடனே எடுத்துரைக்காதீர்கள். வீட்டுக்குள் நுழையும் கணவன் ஸலாம் சொன்னால் புன்னகையுடன் பதில் ஸலாம் கூறுங்கள். இல்லையென்றால் நீங்களே முந்திக்கொண்டு ஸலாம் சொல்லுங்கள். உங்கள் ஸலாம் அவரை அமைதிப்படுத்த உதவும்.

'உங்கள் மீது சாந்தியும், சமாதானமும், இறைவனின் அருளும் அபிவிருத்தியும் உண்டாகட்டும்' என்ற அழகிய பொருளைக்கொண்ட ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’ எனும் ஸலாம் அவரை நிச்சயம் அமைதிப்படுத்தாமல் இருக்காது.
உடனே மறுப்பு வேண்டாம்!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடுத்த போதனைப்படி கணவனுடைய கட்டளை எதுவாயினும் அது உங்களுக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை உடனே செயல்படுத்துங்கள். இதுவும் கணவனின் கோபம் குறைந்து அன்பு பெருக வழி வகுக்கும். கணவனின் கருத்துக்கு மதிப்பளிப்பது இதற்கு முதற்படியாகும். கணவன் என்ன சொன்னாலும் முதலில் அதை ஆமோதித்து விடுங்கள். அவர் சொல்லி முடித்த பிறகு அது பற்றிய உங்கள் கருத்தை அமைதியாக எடுத்துக் கூறுங்கள். சூழ்நிலையறிந்து, சுற்றம் புரிந்து செயல்படுங்கள்.
ஒரு பெண் தமது அன்பான நடவடிக்கையினால் தமது அழகிய குணத்தால் எந்தக் கணவனையும் வெல்ல முடியும்.
நல்லுபதேசம்
மார்க்க ஞானம் கற்ற பெண்ணாக இருந்தால் அந்த ஞானத்தை வைத்து கணவனைத் திருத்துவதும் சுலபமே. கடும் கோப குணம் கொண்டிருந்த முரடரான உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை திருக்குர்ஆனின் வசனங்கள்தானே திருத்தின! அதே வசனங்களும், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மொழிகளும் எந்த மனிதரையும் மாற்ற வல்லவை என்பதில் ஏது ஐயம்?
இமாம் பாகிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அடிமைப்பெண் ஒருத்தி அவர்களின் மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தாள். கை நழுவிய குழந்தை படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு கீழே வந்தது. இமாம் அவர்கள் ஓடிப்போய்த் தூக்கினார்கள். ஆனால் அக்குழந்தையின் உயிர் பிரிந்திருந்தது. இமாம் அவர்கள் கடுமையான கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அந்த அடிமைப்பெண் உடனே திருக்குர்ஆனின் வசனமொன்றை ஒத ஆரம்பித்தார். பயபக்தி மிக்கோரின் பண்புகளைப் பட்டியலிட்டுக் கூறும் வசனம் அது.

‘அவர்கள் இன்பத்திலும், துன்பத்திலும், வளமான நிலையிலும், வறுமையான நேரத்திலும் தாராளமாகச் செலவு செய்வார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மனிதர்களை மன்னிப்பார்கள். அத்தகைய உபகாரிகளை அல்லாஹ் நேசிக்கின்றான்’ என்பது அந்த வசனத்தின் கருத்தாகும். கடும் கோபத்தில் இருந்த இமாம் அவர்களின் செவியில் இந்த வசனம் விழுந்ததுதான் தாமதம்! மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் அப்படியே சினத்தை விழுங்கினார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார்கள், ‘அடிமைப்பெண்ணே! உன்னை நான் மன்னித்தேன். உன் மீது ஏற்பட்ட கோபத்தை மென்று விழுங்கி விட்டேன். உன்னை அடிமைத்தளையிலிருந்து நீக்கி உரிமை விட்டு விட்டேன். அல்லாஹ் என்னை நேசிப்பானாக’.

துஆ - பிரார்த்தனை தான் இறுதி ஆயுதம்
இது போன்ற சந்தர்ப்பங்களில் மார்க்க ஞானம் கற்றவளாக இருந்தால் அந்தப் பெண், தனது கணவனின் கோபத்தை சமாளித்திட இயலும். இதற்கும் அவன் அசைந்து கொடுக்காதவனாக இருந்தால், அப்பொழுது அல்லாஹ்விடம் அழுது துஆ செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

முரண்டு செய்யும் மனைவியைத் திருத்த மூன்று வழிகளைக் கற்பித்த வான்மறை குர்ஆன், தானாகத் திருத்த முடியாத சூழ்நிலையில் இரு குடும்பத்தையும் சார்ந்த நடுநிலையாளர்களை வைத்து சமாதானம் செய்யுமாறு கட்டளையிடுகின்றது. அது கணவன் விஷயத்தில் மனைவிக்கும் பொருந்தும். தமது நற்குணத்தினாலும், அழகிய உபதேசத்தாலும், அற்புத துஆவினாலும் கணவனைத் திருத்த முடியாது போனால் இரு குடும்பத்தையும் சார்ந்த பெரியவர்களை வைத்து சமாதானம் செய்விக்க முயற்சிக்க வேண்டும்.

இல்லறம் சிறக்க....
அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் முன்னிருத்தி வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது கோபக்காரக் கணவனும் முரண்டு செய்யும் மனைவியும் தத்தமது நடவடிக்கைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் வாழ்ந்த வாழ்வில் மிக்க அழகிய முன் மாதிரி ஏராளமாக அமைந்துள்ளன. அதை நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டு இல்லறத்தை நல்லறமாக்கிட முயல்வோம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
02:06 | 0 comments | Read More

ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன?

ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன?
 RASMIN M.I.Sc (India)

பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.]
 ஆலிமாக்கள் என்றால் யார்?

இரண்டு வருடம், மூன்று வருடம், நான்கு வருடம், சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
1. தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டை விட்டு விடுதிகளில் தங்க வேண்டிய கட்டாயக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
2. ஒரு கைக்குட்டையைக்(கர்ச்சிப்) கூட துவைக்கத் தெரியாத காலத்தில் தங்கள் ஆடைகள் அனைத்தையும் தாங்களே துவைக்க வேண்டிய நிலை.(ஆண்களும் இதே கஷ்டத்தை அனுபவித்தாலும் பெண்கள் படும் கஷ்டத்திற்கும் ஆண்கள் படும் கஷ்டத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகிறது).
3. பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை அர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
4. வீட்டில் எத்தனையோ விஷேசங்கள் நடந்தாலும் இவர்கள் அத்தனையையும் தவிர்ந்து கொள்ளும் ஒரு நிலை.
இப்படி பல தியாகங்களைச் செய்துதான் இந்த ஆலிமாச் சகோதரிகள் தங்கள் மார்க்கப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் இந்தச் சகோதரிகள் தங்கள் படிப்பு முடிந்தபின் என்ன நிலையில் இருக்கிறார்கள்?
மார்கத்தில் அவர்களின் நிலை என்னவாகிறது?
அவர்களின் எதிர்கால கணவு என்னாகின்றது?
குடும்ப வாழ்க்கைக்கும் இஸ்லாமிய நெறிக்கும் தொடர்பு இருக்கிறதா?
திருமணத்தின் பின் இந்தச் சகோதரிகளின் நிலை மாற்றம் என்ன? எப்படி அமைகிறது?
ஆடை விஷயத்தில் இவர்களின் நடை முறை செயல்பாடு எப்படி அமைகிறது?
மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்லும் நிலை இருக்கிறதா? இல்லையா?
அதிகமான ஆலிமாக்களை தஃவாக் களத்தில் காணமுடியவில்லையே அது ஏன்?

ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன? உலக வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் இந்த உலக மக்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு சமனாக பெண்கள் செய்த சேவைகள் கண்முன் கொண்டு வந்து நிருத்தப்படும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடங்கி நாம் வாழும் இந்தக் காலம் வரை இந்த உலகத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருப்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் பெண்களின் நிலை என்ன?
பெண் என்றால் போதைக்காக பயண்படுபவள் என்ற மாயையை உடைத்தெரிந்தது இஸ்லாம்.
பெண்களுக்கும் ஆண்மா உண்டென்று உலகுக்குக் காட்டியது இஸ்லாம்.
வீட்டினுல் முடங்கிக் கிடந்தவர்களை உத்தமர்களாக இந்த உலகுக்கு படம் பிடித்துக் காட்டியது இஸ்லாம்.
பெண்கள் சமுதாயத்தில் இடம் பிடிக்கக் கூடாது என்று பல மார்கங்களும், மதங்களும், சித்தாந்தங்களும் கருத்துச் சொன்ன நேரத்தில்ஸஸ..
பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று பெண்விடுதலைக்கு வித்திட்டது இஸ்லாம்.
வீடு, கணவன், பிள்ளைகள் என்றிருந்தவர்களை கல்வித் துறையில் கல்லூரி வரை உயர்தியது இந்த இஸ்லாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் கல்வி நிலை, ஒழுக்கம், நன்நடத்தைகள் என்று அனைத்தும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் காண முடிகிறது.

 நாங்களும் சாதித்துக் காட்டுவோம் :

ஆண்கள் கூட கல்வியைப் பற்றிக் கண்டு கொள்ளாத இக்காலத்தில் பெண்கள் தங்கள் கல்விக்காக செய்யும் தியாகங்கள் அதிகம்.
இந்த தியாகங்களை செய்வதற்கு அவர்களுக்கு பின்னனியாக இருப்பது இரும்புக் கோட்டையின் பலத்திற்கு நிகரான ஒரு எண்ணம் தான்.
அதாவது நாங்களும் சாதித்துக் காட்டுவோம் எங்களாலும் முடியும் எங்களை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை நாங்களும் கல்விக்கு வித்திட்டவர்கள் தான் இது தான் ஆலிமாவாக மாறுவதற்கு அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முதல் எண்ணம்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெருவார்கள். (அல்குர்ஆன் 39:09)
கல்வியை கற்பதில் எங்களுக்கும் தகுதியுண்டு ஜாஹில்யத்தை துடைத்தெரிந்த நபிக்கு இறக்கிக் கொடுக்கப்பட்ட வேதத்தில் கற்றவர்களுக்கு கல்வி கற்காதவர்களை விட மிகப் பெரியதொரு அந்தஸ்த்து இருக்கிறது.
அந்த அந்தஸ்த்து எங்களுக்கும் கிடைக்க வேண்டும் நாங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து அறிந்து அதன்படி தான் நடப்போம்.
கண்மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் அபலைகளும் அல்ல எங்கள் அண்னையர் எங்களுக்கு அப்படி வழிகாட்டவும் இல்லை.
இதுதான் அவர்களின் திடமான கொள்கை.
நபியிடத்திலேயே தட்டிக் கேட்டவர்கள் அல்லவா?
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
(ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''எவர் (மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்'' என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''அல்லாஹ் (குர்ஆனில்) 'வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8) என்றல்லவா கூறுகின்றான்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ''இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். (புகாரி 103)
நபியவர்கள் ஒரு செய்தியைச் சொல்கிறார்கள் அதனை ஒட்டி ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்டு நபியவர்கள் சொன்ன செய்தியின் உண்மை விளக்கத்தை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைக்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
(ஒருசமயம்) பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். ''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திரி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''(ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்'' என்றும் அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 101)
நபியவர்களின் வார்த்தைகளில் கூட மேலதிக விளக்கம் வேண்டி கேள்வி கேட்ட அண்ணையர்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?
கேள்வி கேட்டாயினும் நாம் மார்க்கத்தை தெளிவாக அறிய வேண்டும் என்ற எண்ணம் உயிரில் ஊரியிருக்காதா என்ன?
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.
(மார்க்கத்திற்கு முரனாக செயல்பட்டு பித்அத்களை ஆதரித்து ஒழுக்கம் கெட்டு படித்ததற்கு முற்று முழுதாக மாறு செய்யும் ஆலிமாக்கள் பற்றி தொடரில் தெளிவாக விளக்கப்படும். எதிர்பார்ப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்........)

[ இரண்டு வருடம், மூன்று வருடம், நான்கு வருடம், சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
.பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை அர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
01:43 | 0 comments | Read More

நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன?

Rasmin M.I.Sc

இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.

நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.

திருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))

மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். (நூல் - புகாரி 5063)

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.(அல்குர்ஆன் (13 : 38))

மேற்கண்ட நபி மொழிகளும், திருமறை வசனங்களும் திருமணம் என்பது யாரும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு செயல்பாடாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதை தெளிவாக உணர்த்துகின்றன. 

நிச்சயிக்கப்படும் திருமணங்களும், கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாமிய குடும்பவியலும்.

இன்று நமக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற பல திருமணங்கள் வருடக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் செய்யப்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போது திருமணத்திற்கான தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சில இடங்களில் ஐந்து வருடம் வரை தள்ளி வைத்து விடுவார்கள் கேட்டால் நாங்கள் பேசி வைத்திருக்கிறோம் என்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு தான் கணவன், மணைவி பந்தம்.

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி- 5141)

எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். 

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)

எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். 

ஆண், பெண் தனிமை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2611)

தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் தொலை பேசி உரையாடலும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.

இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.

அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம்.

 தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்

தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல் : புகாரி 6612)

 நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா?  என்று பார்க்க வேண்டும்.

நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. 

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. 

பெண் பேசி வைக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் குறைய வேண்டுமானால் நபியவர்களின் வழிகாட்டுதலைப் போல் பெண் பேசினால் திருமணத்தை செய்து விடுவதுதான் சிறந்த நடை முறையாகும். காலம் தாழ்த்தும் போது நாம் ஏற்கனவே சொன்னதைப் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுவது மட்டுமன்றி பெண் பிள்ளையும் அவள் தரப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது. 

இறுதியாக…………………

அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் காட்டிய வழியில் நமது திருமணங்களை உடனுக்குடன் நாம் அமைத்துக் கொண்டால் நமது வாழ்வில் ஏற்படும் பல சிக்கள்களுக்கும் தீர்வாக அது அமைந்து விடும் என்பதை மனதில் நிறுத்தி இஸ்லாமியக் குடும்பவியலைச் சரியான முறையில் புரிந்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக! http://rasminmisc.blogspot.in/
03:29 | 0 comments | Read More

நபியுடன் வாதிட்டு இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்

03:21 | 0 comments | Read More

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.

RASMIN M.I.Sc

இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.

முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.

இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.

ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

# வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.

# வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

# ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.

# மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.

# குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.

# குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உழூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.

ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?

திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள். 

ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.

திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம்புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதாஅவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)நூல் : முஸ்லிம்.

ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள், தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?

எந்த வேதத்திற்கும் இல்லாத எழுத்துக்குப் பத்து நன்மை என்ற பெருமை.

திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப்லாம்மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாகஅலிஃப் ஓரெழுத்துலாம் ஓரெழுத்துமீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : திர்மிதி.

ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.

இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்?

வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............

இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.

நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல்கள் : முஸ்லிம்திர்மிதி

நீங்கள் எழுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?

நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர்பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்றுசுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்புஅதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி)நூல் : புகாரி (5020)

பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்.

இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம், பொறாமைப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவுபகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)நூல் : புகாரி (5025)

திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.

அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டிபாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம்.

திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பதுஅதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..           http://rasminmisc.blogspot.in/
03:16 | 0 comments | Read More

நோயாளியைக் காணச் செல்பவன் சுவனப்பூங்காவில் இருப்பவன் போலாவான்

 

ஒருவன் நோயாளியைக் கானச்சென்று நலம் விசாரித்து வரும்வரை அவன் சுவனப் பூங்காவில் இருப்பவன் போலாவான் என்றும்,
அவனுக்கு எழுபதாயிரம் வானவர்களைக் கொண்டு இறைவன் நிழல் வழங்குவான் என்றும்,

அவன் எழுநூறு நாட்கள் நோன்பு நோற்ற பலனைப் பெறுவான் என்றும்,
அவன் காலையில் நோயாளியின் நலன் விசாரிக்கச் சென்றால் மாலைவரை அவனுக்காக வானவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவர் என்றும்,

மாலையில் சென்றால் அடுத்த நாள் காலைவரை அவ்விதம் செய்வர் என்றும்,
அவன் நோயாளியின் நலம் விசாரிக்கத் தன் இல்லம் விட்டுப் புறப்பட்டுவிட்டால் அவனையும் நோயாளியையும் அல்லாஹ்வின் அருள் சூழ சூழ்ந்துகொள்ளும் என்றும்,

நோயாளி அர்ஷின் நிழலில் இருக்குங்கால் நலன் விசாரிக்கப் போனவர் ஹளீரத்துல் குதுஸெனும் இடத்திலிருப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
நோயாளியை நலம் விசாரிக்க செல்பவரை நோக்கி உன் நிலைமை நல்லதாகட்டும், நீ நடந்த தொலை தூரங்கள் நன்மையாகட்டும், அதனால் நீ சுவனபதியில் நுழைவாயாக என்று வானவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (நூல்: முஸ்லிம்)

சுற்றத்தாரும் அண்டைவீட்டாரும் அவர்கள் விரோதிகளாகவே இருந்தாலும் அவர்களிடம் சென்று நலன் விசாரிப்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). தன்னை வெறுத்து தன்மீது குப்பை கொட்டிய கிழவி நோயால் பீடிக்கப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கிழவியை நலம் விசாரிக்கச் சென்ற வரலாறு நம் மனதில் என்றென்றும் இருக்கட்டும்.

நோயாளியை சந்திக்கும்போது ஸலாம் சொல்லி ஆறுதல் கூறுவது விரும்பத்தக்கச் செயலாகும். நோயாளியை நலம் விசாரிக்கும்போது நோயாளியை நோக்கி "நீங்கள் நலம் குன்றியிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்கும் ஒவ்வொரு ''துஆ''வும் இறைவனால் அங்கீகரீகப்படக்கூடும், எனவே எனக்காகவும் நீங்கள் இறைவனிடம் வேண்டுங்கள்" என்று கூறுதல் வேண்டும். இப்படிக் கூறுவதால் அவர் மனச் சாந்தி பெறுகிறார்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நோயாளிகளை நீங்கள் நலம் விசாரிக்கச் சென்றால் உங்களுக்காகவும் து ஆ செய்யும்படியும் நோயாளிகளிடம் வேண்டுங்கள். நோயாளி கேட்கும் ''துஆ'' நிச்சயமாக கபூலாகும். ஏனெனில் அவர் பாவம் மன்னிக்கப்பட்டவராய் இருக்கிறார். (நூல்: தப்ரானி)

நோயாளி தனக்கேற்பட்ட நோய் நீங்க மருந்துண்பது சுன்னத்து. நோயாளி தனக்கு உயிர் பிரியப்போக இருப்பதாக எண்ணி மருந்தேதும் உண்ணாமல் இருப்பது விரும்பத்தக்கதல்ல. நோயின் துன்பத்தைப் போக்கி போதிய சுகம் காண மருந்துண்ண வேண்டும்.

ஏனெனில்,
"இறைவன் நோயையும், மருந்தையும் நிச்சயமாக இறக்கி ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்தை உண்டுபண்ணியுள்ளான். எனவே, நீங்கள் மருத்துவம் செய்யுங்கள். ஆனால், ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர்கள்." என்று
அண்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பாளர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்ள் அபூதாவூது)
நோய் பீடிக்கப்பட்டவர்கள் கையாள வேண்டிய விதிமுறைகள்:
o வியாதியின் கடுமையைப் பொருத்துக் கொள்ளுதல்.
o அதைப் பற்றிப் பிறரிடம் பிதற்றுவது, மூறையிடுவது சரியல்ல.

o  இறைவா! என்ன சோதனை இது! என மனம் வருந்தாதிருத்தல்.

o முணக்கத்தை விடுதல்.
o அல்லாஹ்வை ஏற்றிப்போற்றி அதிகமாக அவனை தஸ்பீ ஹ் செய்தல்.
நோயாளி தனக்கேற்பட்டுள்ள வியாதியின் தன்மை பற்றி நெருங்கிய உறவினர், மருத்துவர்கள், உயிர்த் தோழர்கள் போன்றொரிடம் கூறி தகுந்த பரிகாரம் தேடலாம்.

''நோயைக் கொடுப்பவனும் அல்லாஹ், சுகத்தைக் கொடுப்பவனும் அல்லாஹ்வே" என்பதை மறந்திட வேண்டாம்.

www.nidur.info
02:37 | 0 comments | Read More

உம்மி நபியை மாமேதையாக்கியது எது?


''அல்லாஹ்வையும் அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.'' (அல்குர்ஆன் 7:158)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் அதாவது உம்மி நபி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாஹிலியாக் காலத்திலேயே பிறந்தார்கள்.

ஜாஹிலியாக் காலம் என்பது அறியாமைக் காலம். மக்கள் படிப்பறிவில்லாமல் நாகரீகமற்று மூட நம்பிக்கையால் மூழ்கியிருந்த காலம். பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த காலம். இப்படிப் பட்ட கொடூர குணம் கொண்ட மக்கா நகர அரபிகள் மத்தியில் தான் நபியவாகளின் இளமைக் காலம் இருந்த்து.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:

அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் 'அல் அன்ஆம்' (என்னும் 6-வது) அத்தியாயத்தில் நூற்றி முப்பதாவது வசனத்திற்கு மேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் தம் குழந்தைகளை கொன்றுவிட்டு அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி தங்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்தவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகியும்விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய்விட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாய் இல்லை. (திருக்குர்ஆன் 06:140) (புஹாரி 3524)
இவர்களிடத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் சிலை வணக்கம் உட்பட விபச்சாரம், மது அருந்துதல், கொலை, கொள்ளை, சூதாட்டம், வட்டி இன்னும் பல பாவச் செயல்கள் குடிகொண்டிருந்தன. மனிதர்கள் மாக்களாக உலா வந்து கொண்டிருந்த காலம். அரேபியா முழுவதும் அறியாமை எனும் இருள் சூழ்ந்த காலம்.
இக்காலகட்டத்திலேயே முஹம்மதென்னும் ஒளி அரபு தேசத்தில் உண்டாயிற்று பிறக்கும் முன் தன் தந்தையையும்இ பிறந்து ஆறு வருடத்தில் தன் தாயையும் இழந்த நிலையில் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.
இயற்கையிலேயே ஒரு மனிதனது சூழல் அவனது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. சமூகவியலாளர்களின் ஆய்வுகளின் படிஇ ஒரு மனிதனது வாழ்க்கை அவனது பெற்றோர்இ குடும்பம்இ சுற்றுப்புறச்சூழல்இ வருமானம் ஆகிய நிலைகளைக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் அவனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வகையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறு பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெற்றோரின் அரவணைப்பு அவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைத்திருக்கும். தந்தையின் அரவணைப்பு அறவே கிடைக்கவில்லை.
''உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?'' (அல்குர்ஆன் 93:6)
அவர்களது சுற்றுப்புறச்சூழல் கூட பெரிதாக மதிக்கத்தக்க அளவில் இருந்ததில்லை. குடும்ப சூழ்நிலையும் பெரும்பாலாக அல்லாஹ்விற்கு இணை வைக்கும் நபர்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்வனைத்து மோசமான நிகழ்வுகளுக்கு மத்தியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறு பிராயத்திலிருந்து நல்ல பண்புகளோடுஇ சிறந்த ஒழுக்க விழுமியங்களோடு நம்பிக்கையும்இ நாணயமும் உடையவராக காணப்பட்டனர்.
"நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." (அல்குர்ஆன் 68:4)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் அவர்களது சுற்றுப்புறச் சூழல் அவர்களது நடத்தையில் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணத்தை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான்.
''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 3:159)

அல்லாஹ்வின் பேரருள் அவர்களுக்கு இருந்தமையினால் அவர்கள் ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டார்கள்.

''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும் அன்பும் உம் மீது இல்லாதிருந் தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது''. (அல்குர்ஆன் 4:113)
''இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்த வராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.'' (அல்குர்ஆன் 42:52)
''உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.'' (அல்குர்ஆன் 93:7)
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்வே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிற்கு அனைத்து கல்வி ஞானங்களையும் கற்று தந்ததாகவும்இ வழிகெட்ட அந்த ஜாஹிலிய மக்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பதாகவும்இ நேர்வழி காட்டியதாகவும் குறிப்பிடுகின்றான்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் வஹீ ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினூடாக அறிவிக்கப்படுவதன் மூலம் அல்லாஹ் ஒரு மனிதனது சீரான வாழ்க்கைக்கான அனைத்து வழிமுறைகளையும்இ சட்டதிட்டங்களையும் அறிவித்தான்.
வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அருளால்இ வழிகாட்டுதலால் அவன் வழங்கிய கல்வி ஞானத்தால் ஒரு பேரரசையே நிர்வகிககும் அளவிற்கு ஆளானார்கள்.
ஜாஹிலிய மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர அயராது முயற்சி செய்தார்கள். அல்லாஹ்வே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் முன்மாதிரி உள்ளதாகக் கூறுகின்றான்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் பிற்காலத்தில் உலகையே ஆளும் ஒரு மிகப் பெரும் ஆட்சியாளராக மாறியதற்கும் இன்று வரை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றுவதற்கும் உரிய காரணம் என்ன தொடராக ஆராய்வோம்.முதலில் உம்மி என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உம்மி என்றால் தாய் என்பது பொருள். அதாவது தாயை சார்ந்திருப்பவன். கைக்குழந்தைகளே தாயை சார்ந்திருப்பார்கள். எனவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதுகின்ற, படிக்கின்ற விஷயங்களில் தாயை சார்ந்திருப்பவராக அதாவது உம்மி நபியாக இருந்தார்கள்.
சிலர் இவ்விஷயத்தில் முரண்படுகின்றனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று சொல்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகின்றனர். எனவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். இப்படிக் கூறுபவர்கள் உண்மைக்குப் புறம்பாகவே கூறுகின்றனர்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மி நபியாக இருந்தது அவர்களுக்கு ஒருபோதும் தரக் குறைவை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேன்மையையே ஏற்படுத்தியது.
அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் உயர்ந்த இலக்கியத் தரமுடையது. இதுபோன்ற ஒன்றை யாராலும் இயற்ற முடியாது என்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சவால் விடுகின்றான
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்); நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அல்லாஹ் அருளிய குர்ஆனை மக்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இட்டுக்கட்டி உள்ளனர் என நினைப்பர். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அறிந்திருந்தும் அக்கால மக்கள் நபியவர்கள் மீது குர்ஆனை அவரே இட்டுக் கட்டியுள்ளார் என வீணாகக் கதையளந்தனர்.
"இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:38)
அதுமட்டுமில்லாது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதை அந்த மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்த காரணத்தினால் நபியவர்கள் வேறொருவரின் துணையுடன் அல்குர்ஆனை எழுதினார்கள் எனக் கூறத் தொடங்கினர்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அவற்றுள் சில,
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஞீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்ஸஸஸ (அல்குர்ஆன் 7:157)
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)
எழுதப் படிக்கத் தெரியாது என்பது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை அதிகரிக்கும் காரணியாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் உம்மி நபியாக இருந்து அத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது என்பது சாதாரண விஷயமல்ல. அல்லாஹ்வின் வசனங்களே இவ்வனைத்திற்கும் காரணமாக அமைந்தன.
குர்ஆன் எனும் கடலில் ஒருவன் மூழ்குவானேயானால் முத்திலும் பார்க்க விலைமதிப்பற்றவைகளை தமது வாழ்வில் பெற்றுக் கொள்வான். குர்ஆனைப் படிக்கப் படிக்க மனிதன் வாழ்வின் யதார்த்த நிலையை உணர்வான். குர்ஆன் உலகிலுள்ள எந்த புத்தகத்திற்கும் ஒப்பாகாது. அதன் உரை நடையும் ஏனையவற்றிலிருந்து வித்தியாசப்படும். அதைப் மீண்டும் படிக்கப் படிக்க ஒருபோதும் சளிப்பு எற்படுவதில்லை. அல்குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் ஒவ்வொரு எழுத்திற்கும் 10 நன்மையைத் தருகின்றான். அப்படியாயின் அல்குர்ஆன் காட்டித் தந்த வழியைக் கடைப்பிடிப்போமேயானால் அல்லாஹ் எவ்வளவோ நன்மைகளை எமக்கு அருளுவான்.
அநேகமானோரின் வீடுகளில் குர்ஆன் காட்சிப் பொருளாகவே இருக்கின்றது. தூசி துடைத்து வைப்பார்களே ஒழிய திறந்து பார்ப்பது கூட இல்லை. குர்ஆன் வீட்டில் இருந்தால் சரி. அதன் போதனைகளை அறிய ஒரு துளியளவேனும் ஆர்வம் இல்லை. முதலில் குர்ஆன் எதற்காக அருளப்பட்டது என்பது கூட தெரியாத முஸ்லிம்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இது வேதனைப்பட வேண்டிய விஷயம்.
அல்குர்ஆன் மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது பல ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. நல்வழிப்படுத்துகின்றது நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக மனிதனின் சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.
இப்படிப் பட்ட திருமறையை தினமும் படித்து நல்வழியை அடைவோமாக.
- ஃபாத்திமா ஷஹானா கொழும்பு.
02:32 | 0 comments | Read More